தனுஷுக்கு ரெட் கார்ட்?

யாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறைகளை மீறி தனது மாரி -2 படத்தை வெளியிடும் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்ட் விதிக்க தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு படங்களை வெளியிட்டு வந்தார்கள். இதனால் ஒரே நாளில் பலபடங்கள் வெளியாவது நடந்தது. சிறிய  பட்ஜெட் படங்களுக்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

ஆகவே, தயாரிப்பாளர் சங்கம்  ரெகுலேசன் கமிட்டி ஒன்றை  அமைத்தது.  படங்கள் வெளியாகும் தேதியை இக்கமிட்டி தீர்மானிக்கும். இதில் முறைகேடு செய்ய முடியாது. அதாவது, தணிக்கை சான்றிதழ் பெறும் தேதியை அடிப்படையாக்க் கொண்டு படங்களுக்கான வெளியீட்டு தேதியை இந்தக் குழு ஒழுங்குபடுத்தி அளித்து வருகிறது.

இந்த ஏற்பாட்டை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, தனது திமிரு புடிச்சவன்  படத்தை, வேறு ஒரு நாளில் வெளியிட்டார். அதனால் அன்று வெளியான மற்ற படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இப்படி தயாரிப்பாளர் சங்க ஒழுங்குமுறையை மீறிய விஜய் ஆண்டனிக்கு ரெட் கார்ட் விதிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த டிசம்பர் மாதம் மூன்று  தினங்களில் படங்களை  வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தின் ரெகுலேசன் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

14ம் தேதி சீதக்காதி படத்தையும்,  21ம் தேதி  அடங்க மறு, பூமராங், சிலுக்கு வார்பட்டி சிங்கம் ஆகிய படங்களையும்  28ம் தேதி கனா ஆகிய படங்களை வெளியிட இக்கமிட்டி அனுமதி அளித்துள்ளது.

ஆனால் டிசம்பர் 21ம் தேதி  தனது மாரி-2 படத்தை வெளியிடப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் தனுஷ். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2019 ஜனவரியில்தான் மாரி 2 படத்தை வெளியிட தனுஷ் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் இப்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் நடிகர் விசால் பேசியும் அதை தனுஷ் பொருட்படுத்தவில்லை. வரும் 21ம் தேதி மாரி – 2 படம் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார். நாளை (05.12.2018) படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்றும் அறிவித்துவிட்டார்.

இதையடுத்து தனுஷுக்கு ரெட்  கார்ட் விதிக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

# tamil #producercouncil #redcard #Dhanush.#mari2

 

கார்ட்டூன் கேலரி