தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிப்பதா?: வைகோ

சென்னை,

மிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்குகளில் வெளிமாநிலத்தவரை பணிக்கு அமர்த்தி தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிப்பது கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் தொழில் பயிற்சிப் பள்ளிகளில், பொறியியல் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற இலட்சக்கணக்கானவர்கள், வேலை இன்றி பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியாமல் அல்லல்படும் அவலம் நாளும் வளர்ந்தவண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் 1058 பணி இடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 2017 ஜூன் 16 ஆம் தேதி அன்றும், 2017 ஜூலை 28 ஆம் தேதி அன்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி தேர்வு, 2017 செப்டெம்பர் 16 ஆம் நாள் நடைபெற்று, அதன் முடிவுகள் 2017 நவம்பர் 7 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை ஆய்ந்து நோக்கும்போது, ஏறத்தாழ 100 பேருக்கும் மேல், அதாவது பத்து விழுக்காட்டுக்கு மேல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. இதுவரை தமிழக அரசால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளிலும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதோ, வெற்றி பெறுவதோ இல்லை.

நீட் தேர்வினைத் தொடர்ந்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில்,  தமிழக மக்களின் வரிப்பணத் தால் நடத்தப்படும் அரசு பாலிடெக்னிக்குகளில் பிற மாநிலத்தவர்கள் வேலை பெறுவதற்கு உடந்தையாக தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கை (சூடிவகைiஉயவiடிn) வெளியிடப்பட்டுள்ளது.

அப்படி வெளியிடப்பட்டுள்ள பத்தாம் புள்ளியின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பு எண் 2 இல், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்கள் உடையோர், பொதுப்போட்டியினராகக் கருதப்படுவர் என்றும், அவர்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வெளி மாநில மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வாயில்களைத் திறந்து வைக்கும் உள்நோக்கம் உடைய, கண்டனத்திற்கு உரிய நடவடிக்கை ஆகும். மேற்கண்ட இதே தேர்வு, 2012 ஆம் ஆண்டில்,  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டபோது, தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் இந்தக் குறிப்பு அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால், அண்மைக்காலமாக தமிழக அரசு வெளியிடும் ஒவ்வொரு அறிவிக்கையிலும் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பிற மாநில சாதிச் சான்றிதழ் பெற்று இருப்பவர்கள், பொதுப்பிரிவினராகவே கருதப்படுவர் எனத் தெரிவிக்கின்றது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களின் வேலைவாய்ப்பு அறிவிக்கை போலவே, 2016-17 ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறையின் 9.5.2017 இல் வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1போன்ற பணி இடங்களுக்குக் வட, பிற மாநில மாணவர்களுக்கு வழிவகுக்கும் வகையில் அத்தகைய தேர்வர்கள் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற நிலைமை நீடித்தால், இளநிலை, முதுநிலை கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள், பல்வகைப் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள், முதுகலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வியில் பணி ஆற்றும் ஆசிரியர்கள் போன்ற பணி இடங்களுக்கு, அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான நியமனங்களிலும், வெளிமாநில மாணவர்கள் நுழைந்து, தமிழகத்தில் பயின்ற தமிழக மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

தமிழகத்தில் ஆசிரியர் பணி ஏற்கும் வெளி மாநிலத்தவர், தமிழ் அறியாத நிலைமையில், நம் தமிழக மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலைமை ஏற்பட்டால், கல்வியின் தரம் எந்த அளவுக்குத் தாழ்ந்துவிடும் என்பதை எண்ணும்போதே கவலை சூழ்கின்றது. இதே நிலைமை நீடித்தால், தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை எல்லாம் வெளி மாநிலத்தவர் அபகரிப்பர்.

தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலும், வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் புகுத்தும் விதத்திலும் நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்குகளில் ஆசிரியர் பணி பெறத்தக்க வகையில் தேர்வு நடத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்”  என்று வைகோ தெரிவித்துள்ளார்.