Random image

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து மேல் முறையீடு….கர்நாடகா பாஜக, காங்., மஜத ஆதரவு

பெங்களூரு:

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் நேற்று பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன், கர்நாடகா எம்.பி.க்கள், காவிரி படுகை எம்.எல்.ஏ.க்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக இதை எதிர்க்க கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அரசு மேல் முறையீடு செய்ய ஆதரவு அளித்துள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் சிவக்குமார் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீர் கிடைத்தது. ஆயினும் கர்நாடக நலனுக்கு எதிரான சில அம்சங்கள் தீர்ப்பில் உள்ளன. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்து அதன் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து இருக்க வேண்டும்.

ஆனால் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கர்நாடகத்துடன் கலந்து ஆலோசிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அவசரகதியில் அமைத்து உள்ளது. டில்லியில் திங்கள் கிழமை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிப்பார்கள்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை எந்தெந்த அம்சங்கள் அடிப்படையில் தயாரிப்பது என்பது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

இந்த வி‌ஷயத்தில் கர்நாடகத்தின் நலன்களை பாதுகாக்க இறுதிவரை போராடுவோம். மேலும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க கர்நாடக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பிரச்சினையை கிளப்புவார்கள்’’ என்றார்.

இந்த கூட்டத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையா புறக்கணித்தார். கர்நாடக மாநில நீர்வதள ஆதார முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், காவிரி நீராவரி நிகாம் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரசன்னா ஆகியோர் டில்லியில் நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.