திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்கும் தருணம்! தமிழருவி மணியன்

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி டிடிவி தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி என்றும், தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்றும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்கும் தருணம் வந்துவிட்டது என்றும்  காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 50 சதவிகிதத்துக்கும் மேலாக வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுக டெபாசிட் இழந்தது.

இந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது,

”தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிதாபகரமான தோல்வியையே இனம் காட்டுகின்றது.

இன்று ஒரே ஒரு இடைத்தேர்தலில் பணத்தின் மலினமான ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த இயலாத தேர்தல் ஆணையம், நாளை நடக்கவிருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் ஜனநாயக விரோத நடைமுறைகளை எப்படித் தடுத்து நிறுத்தக் கூடும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலை பேசும் அருவருப்பான அரசியல்வாதிகளின் அணுகுமுறையும் பணத்தை வாங்கிக் கொண்டு வெற்றியைத் தேடித் தரும் வாக்காளர்களின் அறியாமையும், இந்த இழிநிலையைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையம் தன் இயலாமையை வெளிப்படுத்தும் கையறுநிலையும் மக்களாட்சியின் மகத்துவத்தையே ஏளனத்துக்குரியதாக மாற்றிவிட்டன.

பணநாயகம் வென்றிருப்பது உண்மைதான். ஆனால், திருமங்கலம் பார்முலாவைத் தமிழகத் தேர்தல்களில் அறிமுகப்படுத்திய திமுக இப்படிச் சொல்வதற்கு எந்தத் தார்மிகத் தகுதியும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதிகார பலத்தையும் பண பலத்தையும் எவ்விதக் கூச்சமுமின்றி வெளிப்படையாக அரங்கேற்றி பின்பு மிக மோசமான தோல்வியைத் தழுவி யிருக்கும் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் பரிவாரம் இனி ஆட்சிப் பீடத்தில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை.

நெறி சார்ந்த மாற்று அரசியல் மலர்வதற்கு, திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு இனியேனும் மக்கள் முன் வர வேண்டும். அதற்குரிய தருணம் வந்துவிட்டது”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.