ஐ.நா. அழைக்கவே இல்லை: ஏமாற்றப்பட்டாரா மு.க. ஸ்டாலின்?

சென்னை:

.நா., சபை மனித உரிமைகள் கவுன்சில் 35வது  கூட்டத்தில் இலங்கை தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து பேச தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததாகவும், சட்டமன்ற பணிகள் இருப்பதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனின் துணை உயர் கமிஷனர், கேட் கில்மோருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதாகவும் தி.மு.க. தலைமை அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டது.

சம்பந்தமே இல்லாமல் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலினும் “போன் ஒயர் அறுந்து ஒரு வாரம் ஆ்சசு” என வசனம் பேசிய நடிகர் நாராயணனும்

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவே இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்தில் இலங்கை  ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் விவகாரம் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை.

இப்படி இல்லாத ஒரு கூட்டத்தில்,  தான் கலந்துகொள்ளாதது குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

அது மட்டுமல்ல, ஸ்டாலின் தனது அறிக்கையில்,

“இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இலங்கை பற்றிப் பேசப்படாத கூட்டத்தில் அதற்கு என்ன தீர்வு கிடைத்துவிடும்.

ஐ.நா. மனித உரிமை 35 ஆம் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரல் (இலங்கை விவகாரம் இல்லை.)

உண்மையில் அடுத்த (2018) வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட இருக்கிறது.

அதுவரை ஐ.நா. பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழ விவகாரம் பற்றி  பேசப்பட வாய்ப்பே கிடையாது” என்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.

”பிறகு எப்படி ஸ்டாலின் அப்படிச் சொன்னார்?” என்று  கேட்டோம்.

அவர்கள் தெரிவித்தது இதுதான்:

“ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ.)  “துணைக் கூட்டங்களை” நடத்த அனுமதி உண்டு.  இதற்கும் ஐ.நா. சபைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

 

கூட்டத்தை நடத்தும் என்.ஜி.ஓ. அமைப்பே முழு பொறுப்பாகும். இதில் கலந்துகொள்பவர்களை அந்த என்.ஜி.ஓ. அமைப்பே தீர்மானித்து அழைக்கும்.

அது போல “தமிழ் உலகம்” (Tamil Uzhagam) என்கிற ஒரு என்.ஜி.ஓ. அமைப்பு வரும் (ஜூன்)  19 ம் தேதி “இலங்கையில் மனித உரிமை” எனும் கூட்டத்தை நடத்துகிறது. இந்த தமிழ் உலகம் அமைப்புதான் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கும் ஐ.நா.வுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.  குறிப்பிட்ட அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றால், தமிழ் உலகம் என்ற அமைப்புக்குத்தான் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் யாரோ ஒரு அமைப்பு அழைத்த கூட்டத்துக்கு வர முடியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

உங்கள் வீட்டுக்கு அருகாமையில் தெருவோரத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர், “மன்னிக்கவும். கூட்டத்துக்கு நான் வரமுடியவில்லை” என்று உங்களுக்கு கடிதம் எழுதினால் என்ன செய்வீர்கள்?

என்.ஜி.ஓ.க்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் (தமிழ் உலகம் நடத்துவதும் இருக்கிறது.)

முதலில் சிரிப்பீர்கள். பிறகு… இப்படி கடிதம் எழுதியவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்று நினைப்பீர்கள்.

அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

அதாவது ஸ்டாலின் ஏமாந்தாரா.. ஏமாற்றுகிறாரா?

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். மூத்த உறுப்பினர்கள் சிலர், “தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் நெருங்கிவிட வேண்டும் என்று சிலர் இப்படி ஃபிராடுத்தனங்களை செய்துவிடுகிறார்கள். ஏற்கனெவே இப்படித்தான், “தலைவர் கலைஞரின் சமூக சேவையை ஆஸ்திரிய நாட்டிடம் தெரிவித்தோம். அதைப் பாராட்டி அந்நாட்டு அரசு கலைஞருக்கு ஸ்டாம்ப் வெளியிட்டது” என்று தெரிவித்து கலைஞரிடம் கொண்டு வந்து காட்டினார்கள் சிலர்.

தலைவர் கலைஞரும் அதை நம்பி, தனது பேஸ்புக் பக்கத்தில்  “என்னுடைய தமிழ்ப் பணி – சமுதாயப் பணியை பாராட்டி, ஆஸ்திரிய நாடு கடந்த ஜூன் 3ம் தேதி அன்று, “கலைஞர் 90′ என்ற அஞ்சல் தலையை வெளியிட்டது” என்று தெரிவித்தார். பிறகுதான் தெரிந்தது… ஆஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் யார் போட்டாவையும் ஸ்டாம்பில் வெளியிடுவார்கள் என்பது.

இந்த விவகாரம் அப்போது தமிழகம் எங்கும் சிரிப்பாய் சிரித்தது.

இப்போது செயல் தலைவரான தளபதியையும் சிலர் ஏமாற்றியிருக்கிறார்கள். ஐ.நா. அரங்கில் யாரோ நடத்தும் கூட்டத்தை, ஐ.நா. சபையே நடத்துவதாக பொய்யாக பில்ட் அப் கொடுத்திருக்கிறார்கள். இதை நம்பிய தளபதியும், சம்பந்தமே இல்லாமல் ஐ.நா. சபைக்கு கடிதம் எழுதியதோடு, அதை மீடியாக்களுக்கும் வெளியிட்டுவிட்டார்” என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் சிலர்.

ஆக, சூரியன் படத்தில் கவுண்டமணி – பசி நாராயணன் வரும் “போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சு” என்ற காமெடி நிஜத்திலேயே நடந்திருக்கிறது.