தலைமறைவு ஃபைனான்சியர் அன்புச்செழியன் கைது?

சோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்படும் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவிவருகிறது.

திரைப்பட நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளருமான அசோக்குமார் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், அதிக வட்டி கட்டியும்கூட அன்புச்செழியன் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் அசோக்குமார் எழுதியதாக கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

இது குறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் அன்பு செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அன்புசெழியன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.

தேனி அருகில் அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.  இந்த நிலையில் அவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் கிடைக்க அங்கும் காவல் துறையினர் தேடிச்சென்றனர். ஆனால் அன்புச்செழியனை பிடிக்க முடியவில்லை.

 

பிறகு,  பெங்களூரில் இருந்து மைசூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதிக்கு அன்புச்செழியன் வந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வனப் பகுதிகளில் உள்ள குடில்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மசினகுடியை அடுத்துள்ள கல்லட்டி பகுதியில் உள்ள தனியார் தங்கும் சொகுசு விடுதி, ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், கேத்தி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆனாலும் அன்புச்செழியனை பிடிக்கமுடியவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு, ஹைதரபாத்தில் வைத்து அன்புச்செழியன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலவுகிறது.

ஹைதராபாத் நகரில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அன்புச்செழியனுக்கு நெருக்கமான தெலுங்குப்பட விநியோகஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான பங்களாவில் அன்புச்செழியன் பதுங்கி இருந்ததாகவும் அவரை தனிப்படையினர்  நேற்று இரவு கைது செய்ததாகவும், சென்னை கொண்டுவரப்படும் அவர், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

ஆனால், இது குறித்து காவல்துறைவட்டாரங்கள் தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.