காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை  கடைபிடிக்க வேண்டும்  ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1949ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு ஆகியவை  நீக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக்கும் மசோதவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்த விவகாரம் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது.  அதே வேளையில் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த பரபரப்பான சூழலில்,  இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல், ஊடுருவல் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கையாக அதிகளவு ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் அதிகபட்ச பொறுமை கடைபிடிக்க வேண்டுமென்று ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்டோனியோ,  “சமீப காலமாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய  இருநாடுகளும் தங்களின் எல்லைப் பகுதியில் ராணுவத்தை  குவித்து வருகிறது.

இதை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐநா ராணுவ நடவடிக்கை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள  பதற்ற சூழலில் இரண்டு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.