தர்மத்திற்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி: திருமாவளவன்

சென்னை:

ன்னை வெற்றி பெற வைத்த சிதம்பரம் தொகுதி மக்களுக்கே தனது வெற்றியை காணிக்கையாக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி.மு.க. கூட்டணி சார்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முதலே சிதம்பரம் தொகுதியில் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக சிதம்பரம் தொகுதி தமிழக அரசியலில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தன்னை வெற்றி பெற வைத்த சிதம்பரம் தொகுதி மக்களுக்கே தனது வெற்றியை காணிக்கையாக்குவதாகவும், இந்த வெற்றி அறத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி. எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். 5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள்.  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டி யிட்ட என்னை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.