நீர்வரத்து 1லட்சம் கன அடியை எட்டியது! காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்:

காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால்,  தமிழகத்தில் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள், நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை நீடிப்பதால், உபரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்த நீர்  தமிழக எல்லையான  தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலு விற்கு வந்து சேர்ந்துள்ளது. தற்போது நீர்வரத்து 1 லட்சம் கனஅடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்  பலத்த மழை பெய்து வருகிறது. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை அட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000ம கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  இந்த அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் வந்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பி கூடுதல் நீர் திறக்கப்படும்.

எனவே. கரையோர மக்கள் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.16 அடியாக உயர்ந்துள்ளது. 35 ஆயிரம் கன அடிநீர்வரத்துள்ளதால் 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பி 22 டி.எம்.சியாக உள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால்,மேட்டூர் நீர்தேக்கப்பகுதியான கோட்டையூரில் தண்டோரா மூலம்வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cauvery water, heavy rain in karntaka, Mettur dam, Pilikuntulu, Warning to Cauvery Coastal People, water has reached 1 lakh cubic feet!
-=-