திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக  மழை தொடர்ந்து  மிரட்டி வரும் நிலையில்,  முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்ந்து வருகிறது. அதுபோல  மழைநீரால் சூழப்பட்டு உள்ளதால் கொச்சி விமான நிலையமும் மூடப்பட்டு உள்ளது.  பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், மக்களின் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்ற நிலையில், தற்போது தென்மேற்க பருவ மழையின் தீவிரம் காரணமாக  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இதுவரை 22 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், வயநாடு போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொச்சி வரும் விமானங்கள் சென்னை உள்பட பல விமான நிலையங் களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

கனமழை காணமாக  முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து உள்ளது. தற்போது அணைக்கு  15,700 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாக தெரிவிக் கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் 116 அடி உயரம் இருந்த நீர்மட்டம், நேற்று ஒரே நாளில் கிடுகிடுவென 4 அடி உயர்ந்து 120 அடியாக அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலையில், அணையில் இருந்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அணை முழு கொள்ளவான 142 அடியை, சில நாட்களில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.  மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை 22 பேர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.