மோடிக்கு எதிராக அரசியல் அலை வீசுகிறது: சரத்பவார்

புனே: நாட்டில் தற்போது அடிக்கும் அரசியல் அலை, பாரதீய ஜனதாவுக்கு சாதமாக இல்லை. பிரதமர் மோடி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது; பாரதீய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த சட்டமன்ற தேர்தல்களில், அக்கட்சிக்கு என்ன நிலை ஏற்பட்டது பார்த்தீர்களா! அந்த தோல்வியை பலரும் எதிர்பார்க்கவில்லை.

வேளாண்மை சார்ந்த பல்வேறான துன்பங்களில் உழலும் கிராமப்புற இந்தியர்கள், மோடியின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். நான் வேளாண் அமைச்சராக பதவி வகித்தபோது, இந்தியா மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராகவும், கோதுமை, பருத்தி மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்ந்தது.

மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ரூ.34,000 கோடி விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்திருந்தாலும், தங்களின் கடன் எப்போது தள்ளுபடி ஆகும் என்று விவசாயிகள் காத்துக்கொண்டுள்ளனர்” என்றார்.

– மதுரை மாயாண்டி