மீனவர்கள் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே வழி! ஜெயக்குமார்

சென்னை,

மிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்க கச்சத்தீவை மீட்பதே வழி என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

ஓகி புயலின்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குமரி மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ஓகி புயல் காரணமாக பெரும் சேதத்தை சந்தித்துள்ள குமரி மாவட்ட  புயல் பாதிப்புகளை பார்வை யிடாமல் தவிர்த்து வந்த முதல்வர் எடப்பாடி, குமரி மாவட்ட மக்களின் போராட்டத்தை தொடர்ந்து இன்று புயல் சேதங்களை பார்வையிடவும், மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் குமரிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம்  செய்தியாளர்கள் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவதும், சிறை பிடிக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தவிர்க்க, இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும், இது பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வழிவகுக்கும் என்றார்.

மேலும், குமரி மாவட்டடத்தில் புயலின்போது காணாமல் போன மீனவர்கள் குறித்து தெரிவித்த அமைச்சர்,  கடலில் மிதந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தான் உயிரிழப்பு விபரம் தெரியும் என்றும்,  கடல்தொழில் என்பது வேட்டை போன்றது என்று கூறினார்.

கடைசி மீனவரையும் மீட்டெடுப்பது அரசின் கடமை, எனவே அதுவரை மீட்புப்பணி தொடரும் என்றும், ஓகி புயலில் மாயமான தமிழக மீனவர்களில் இதுவரை 3262 பேரும் 322 படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 462 மீனவர்களையும் 56 படகுகளையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடைசி மீனவரை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணி தொடரும்.

மீனவர்களிடம் அட்சரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றைப் பெற்று அவர்களின் ஆலோசனை யின்படி, மீனவர்கள் அளித்த இடத்தின் குறிப்பை வைத்து அந்த பகுதிகளில் மீனவர்களையும் அழைத்து சென்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மீனவர்கள் கடலுக்குள் எந்த நாட்டிக்கல் மைலாக இருந்தாலும்  அவர்களை  தேடும் பணி நடைபெறும்

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தொடர்பாக வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு முதல்வர் பழனிசாமி கண்டிப்பாக விரைவில் கொண்டு செல்வார். மேலும் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.