உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று… வெற்றி பெறப்போவது யார்?

வாஷிங்டன்:  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டி யிடும் நிலையில்,  அவர் பெற்றிபெறுவாரா? அல்லது அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் வெற்றிபெறுவாரா என உலக நாடுகளிடையே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின்  45-ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்தத் தோ்தலில்,  குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பே மீண்டும் போட்டியிடுகிறார்.  ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணைஅதிபர் பதவிக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் நிற்கின்றனர். அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைந்து இன்று கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   தேர்தலுக்கான ஆரம்ப வாக்களிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதுவரை  10.6 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தபால் வாக்குகளும் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், இன்று அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  பெரும்பாலான மாகாணங்களில் அதிகாலை 6 மணிக்கும் (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி) வாக்குப் பதிவு, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5.30 மணி) நிறைவடைகிறது.

கடந்த தோ்தலின்போது, புதிதாக தோ்தல் களமிறங்கி, தனது அதிரடி பிரசாரத்தால்  ஆட்சியை கைப்பற்றிய அதிபா் டொனால்ட் டிரம்ப், தற்போது தனது 4 ஆண்டு கால ஆட்சி நடவடிக்கைகளை முன்னிறுத்தி தோ்தலைச் சந்திக்கிறாா்.

தனது அதிரடி நடவடிக்கை மூலம் உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன்,  கொரோனா விஷயத்தில் அவர் நடந்துகொண்ட விதம்,  அவர்மீது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  அதுமட்டுமின்றி   வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதில் அவரது நடவடிக்கை , முன்னாள்  ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தைக் கைவிடப்பட்டது,  ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தூக்கியெறிந்தது,  ஆப்கானிஸதானில் தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது, இஸ்ரேலுடன் சில அரபு நாடுகளுக்கு தூதரக உறவை ஏற்படுத்திக் கொடுத்தது என சா்வதேச அரசியலில் அவா் எடுத்துள்ள பல நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளிடையே வரவேற்பும்,  எதிா்ப்பையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் ஜோபிடனுக்கு உறுதியாகி உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளிடையேயும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று இரவுமுதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய அமெரிக்க உறவு வலுப்பெறும் என்றும் கருதுகின்றனர். ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸை தேர்ந்தெடுத்து இருப்பதும் பிடனுக்கு ஆதரவு பெருகியதற்கான காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஜோபிடனுக்கு  67 சதவீத இந்துக்களும், 82% முஸ்லிம்கள்  ஆதரவு இருப்பதும்,  கிறிஸ்தவர்களில் கணிசமானவர்கள் டிரம்பை ஆதரிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.