பெண்களை சீண்டியவர்களை தட்டிக் கேட்ட இளைஞர் எரித்துக் கொலை!: அதிர்ச்சி மரண வாக்குமூலம்

--

கடலூர்:

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களை தட்டிக்கேட்டதால் தன்னை  உயிரோடு எரித்துவிட்டார்கள் என்று  இளைஞர் ஒருவர் மரண வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்தன்.  ஐ.டி.ஐ படித்து விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல  முயற்சித்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்  பேருந்து நிறுத்தம் அருகே  ஆனந்தன் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சிலர்,  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். ஆனந்தனின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தோர் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த ஆனந்தன்  நேற்று காலை சிகிச்சைக்க பலனின்றி மரணமடைந்தார். .

முன்னதாக மருத்துவமனையில் மரண வாக்கமூலம் அளித்த ஆனந்தன், சாத்தாவட்டம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அப்பகுதி பெண்களை கேலி செய்த சில இளைஞர்களையும், தான் தட்டிக் கேட்டதால் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக ஆனந்தன்  கூறியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனந்தனை எரித்துக் கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, இருநூறுக்கும்  மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.