தர்பார் திரைப்படத்தை வாங்க தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்து வருவதால், திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள் தர்பார் படத்தை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் மலேசிய ரஜினி ரசிகர்களை இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சியாக தர்பார் திரைப்பட விவகாரம் குறித்து விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தர்பார் படத்தின் டிக்கெட்களை அதிக அளவு பங்குகள் அளிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறுவதாகவும், ஆனால் அதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும், இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் தெரிகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 70% திரையரங்கு உரிமையாளர்கள் இன்னும் தர்பார் படத்தை வாங்க ஒப்பந்தம் செய்யாமல் உள்ளனர்.

ஆனாலும், இன்னும் 2 நாட்கள் இருப்பதால் அதற்குள் இந்த பிரச்சனை பேசி சரி செய்யப்படும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா ? என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.