ரெயில்களில் திருட்டு: ஒரே ஆண்டில் 11லட்சம் பேர் கைது!

டில்லி,

ரெயில்களில் திருடியதாக ஒரு ஆண்டில் 11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம்  அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மட்டும் ரெயில் மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் திருடியதாக 11 லட்சம் பேரை இந்திய ரெயில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திருட்டில், அதிகபட்சமாக மாகாராஷ்ட்டிரா மாநிலத்தில் 2.23 லட்சம் பேரும், உத்தரப்பிர தேசத்தில் 1.22 லட்சம் பேரும்,  மத்திய பிரதேசத்தில் 98,594 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 81,408 பேரும், குஜராத்தில் 77,047 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில், பயணிகளின் பொருட்கள் மட்டுமின்றி,  பெரும்பாலோர் ரெயில் பெட்டியில் உள்ள இரும்பு கொக்கிகள், இரு தண்ட வாளங்களை இணைக்கும் இரும்பு பிளேட்டுகள், மின்சாரம் பாயும் காப்பர் ஒயர்கள், ரயிலின் இரும்பு பிரேக்- சூக்கள், போல்ட்நட் உள்பட  வாஷ்பேசின், பேஃன்கள், பல்புகள்,ஏ.சி.பெட்டிகளிலில் இருக்கும் டவல்கள், கழிவறையில் இருக்கும் கப்புகள், குழாய்கள், கண்ணாடிகள் போன்ற சிறு பொருட்களையும்  திருடியுள்ளது குறிப்பிடத்தக்கது.