தமிழகத்தில் 14 சுங்கச் சாவடிகளில் இன்றுமுதல் கட்டண உயர்வு அமல்

சென்னை:

மிழகத்தில் 14 சுங்கச் சாவடிகளில் இன்றுமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 461 சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த  தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் தனியாருக்கு ஒப்பந்தம் முறையில் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992 -ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பல சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு இன்று (செப்டம்பர்) முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடாலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை-தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னமராவதி, தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.