வாஷிங்டன்

மெரிக்க குடியுரிமை மற்றும் இமிக்ரேஷன் சர்வீஸ், கடந்த 11 வருடங்களில் எச்1பி வேலைவாய்ப்பு விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்ததாக தெரிவிக்கிறது

அமெரிக்க அரசு அளிக்கும் எச்1பி விசா என்பது அமெரிக்காவில் பணிபுரிவோருக்கு அளிக்கப்படுவதாகும்.  இந்த விசா பெற்றவர்களில் இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.  அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் வரும் வெளிநாட்டு ஊழியர்களில் இந்தியர்களே சுமார் 70% உள்ளார்க்ள்.

கடந்த 2007ஆம் வருடத்தில் இருந்து இந்த வருடம் ஜுன் மாதம் முடிய எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டது பற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் இமிக்ரேஷன் சர்வீஸ் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி  கடந்த 11 வருடங்களில் இந்த விசாவுக்காக விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 34 லட்சம் பேர்கள் ஆவார்கள்   அதில் 21 லட்சம் பேர் இந்தியர்கள்.  இதுவரை 26 லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

விசா வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் மற்றும் பட்டமேற்படிப்பை முடித்தவர்கள்.  இவர்களின் சராசரி ஊதியம் $92317 ஆகும்.  விசா வழங்கப்பட்டவர்கள் எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்னும் விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த விசா வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 25-34 வயதுக்குள் உள்ளவர்கள்.  20 லட்சம் பேர் கம்ப்யூட்டர் துறையில் பணி புரிபவர்கள்.  அதே போல் கட்டுமானத்துறை, ஆசிரியப்பணி, நிர்வாகத்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஆகிய துறையில் உள்ளவர்களுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வு பெற்ற பின் அமெரிக்காவில் பணி புரிய விண்ணப்பித்த சிலருக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.  இந்த 11 வருடங்களில் 65 வயதானவர்களில் 2000 பேருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த வருடம் மட்டும் 65 வயதைத் தாண்டிய 122 பேருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.