ஊரடங்கு தளர்வுகள் உண்டுதான் – ஆனால் இந்திய அணிக்கான பயிற்சி உண்டா..?

மும்பை: நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சி உடனடியாக துவங்காது என்றே பிசிசிஐ பொருளாளர் அருண் துமாலின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.

ஊரடங்கு தளர்வில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்திய அணியின் பயிற்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது, “மே 31ம் தேதி வரை மக்கள் நடமாட்டம் & விமானப் போக்குவரத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அணி வீரர்களின் பயிற்சிக்காக காத்திருக்கிறோம். எதிலும் அவசரம் காட்ட விரும்பவில்லை.

அதேசமயம், மாநில கிரிக்கெட் சங்கங்கள், வீரர்களின் பயிற்சிக்கு தேவையான சில ஏற்பாடுகளை செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறோம். தற்போது, இந்திய அணிக்கான திட்டத்தை தயாரிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.

அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலனைப் பாதித்து விடக்கூடாது என்பதால் நாங்கள் நிதானமாகவே யோசிக்கிறோம்” என்றுள்ளார்.