கொரியா பொருட்கள் இல்லாத வீடுகளே இந்தியாவில் இல்லை….மோடி

டில்லி:

டில்லி அருகே நொய்டாவில் சாம்சங் நிறுவன செல்போன் தொழிற்சாலையை தென் கொரியா அதிபர் மூன் ஜே இங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வாழ்க்கை முறைகள் மிகவும் சுலபமாகி விட்டது. இந்தியாவில் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இன்டர்நெட் வசதியையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

இவற்றில் 50 சதவீதம் தொழிற்சாலை நொய்டாவில் உள்ளது. இதன் மூலம் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரியா நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவில் கொரியா பொருட்கள் இல்லாத நடுத்தர மக்கள் வீடுகளே இருக்க முடியாது’’ என்றார்.