ஊடகங்களின் ஒருதலைபட்ச அணுகுமுறை – உச்சநீதிமன்ற நீதிபதி கவலை

புதுடெல்லி: ஊடகத்தின் ஒரு பிரிவினர், பாரபட்சத்துடன் செயல்படுவது தெளிவாக வெளிப்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் கவலை தெரிவித்துள்ளார்.

ர‍ஃபேல் ஊழல் தொடர்பான தன்னுடைய தனி தீர்ப்பில் இதை தெரிவித்துள்ளார் நீதிபதி.

அவர் கூறியிருப்பதாவது, “தமது முக்கியமான பொறுப்பை உணராத ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும். ஊடகத்தின் ஒரு பிரிவில், ஒருதலைபட்சமான தன்மை வலுவாக வேரூன்றியுள்ளது.

தமக்கான வணிக நலன்களை தக்கவைப்பது மற்றும் அதன்பொருட்டு குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை ஆதரிப்பது போன்றவற்றால், ஊடகங்களின் நடுநிலைத்தன்மை சிதைந்து, தகவல்கள் திரிக்கப்படுகின்றன.

இந்திய ஜனநாயகத்தைக் காப்பதில், ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. மேலும், துடிப்பான ஜனநாயகம் நம் நாட்டில் தொடர்வதில், அவர்களுடையப் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்தார்.

– மதுரை மாயாண்டி