புதுடெல்லி: சிமெண்ட் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

அவர் கூறியுள்ளதாவது, “தற்போதைய சூழலை, தமக்கு சாதகமாக திருப்பிக் கொண்டுள்ளன சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள். ஆனால், அது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. சுமார் ரூ.111 லட்சம் கோடிகள் மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஆனால், சிமெண்ட் மற்றும் ஸ்டீல் விலை இப்படியே ஏறிக்கொண்டிருந்தால், எங்களுக்கு மிகவும் சிரமமாகிவிடும். சிமெண்ட்  மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு இடையில் கூட்டணி உள்ளது.

ஒவ்வொரு ஸ்டீல் நிறுவனமுமே தங்களின் சொந்த இரும்பு சுரங்கத்தை வைத்துள்ளதால், தொழிலாளர் ஊதியம் மற்றும் மின்சார கட்டணத்தில் அவர்களுக்கு கூடுதலாக எதுவும் செலவு ஏற்படுவதில்லை. ஆனாலும், விலையை மட்டும் காரணமின்றி உயர்த்துகின்றனர். இதைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமாக உள்ளது” என்றுள்ளார் அமைச்சர்.