காந்திய மக்கள்  இயக்கத்தின்  தலைவர் தமிழருவி மணியன் அரசியலைவிட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டார்.  அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள், இது குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் patrikai.com  இதழுக்காக தமிழருவி மணியன் முன் சில கேள்விகளை வைத்தோம்.

நல்லகண்ணு - தமிழருவி மணியன்
நல்லகண்ணு – தமிழருவி மணியன்

நல்லகண்ணு போன்றவர்கள், தேர்தலில் தோல்வியே கிடைத்தாலும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடத்தானே செய்கிறார்கள்.  தொகுதிக்கு 2000 வாக்குகள்கூட கிடைக்கவில்லை என்பதால் பொதுவாழ்க்கையை விட்டே விலகுவதாக சொல்வது சரிதானா என்ற விமர்சனம் உங்கள் முன் வைக்கப்படுகிறதே…
பொதுவாக எந்த ஒரு விசயத்திலும், வெளியில் சொல்லக்கூடிய காரணங்கள் என்று சில உண்டு. சொல்ல முடியாத காரணங்கள் என்றும் சில உண்டு.
நல்லகண்ணுவுக்கும் தமிழருவி மணியனுக்கும் வித்தியாசம் உண்டு.  அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். மற்றபடி, கட்சியை அவர் தனது  தலையில் சுமக்கவில்லை.  ஆனால், காந்திய மக்கள் கட்சியை இந்தத்  தமிழருவி மணியன் தலையில் சுமந்தாக வேண்டிய கட்டாயம்.
இயக்க அலுவலகத்தின் வாடகை, பணியாளர்களுக்கான அவசியமான ஊதியம், அன்றாட அடிப்படை செலவு என்று குறைந்தபட்சம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகிறது. வருடம் 6 லட்ச ரூபாய்.
இந்தத் தொகையை திரட்டும் சுமை என் தலையில்தான் விழுகிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக சுமார் 30 லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. இதை என் நண்பர்கள் மனப்பூர்வமாக அளித்த தொகை, எனது மாத ஓய்வூதியம் 19,700 ரூபாயில் இருந்து மாதம் 1000 ரூபாய், அதோடு நான் கூட்டங்களில் பேசுவதில் கிடைக்கும் அன்பளிப்பு தொகை ஆகியவற்றைக் கொண்டு ஈடு செய்து வந்தேன்.
மற்றபடி  எவரிடமும் கையேந்தி பணம் பெற்று இயக்கத்தை நடத்தவில்லை. வெளிநாட்டில் உள்ள பலர், என் மீது  அன்புகொண்டு தர முன்வந்தாலும் டாலரோ, ஈரோவோ பவுனோ நான் பெறவே இல்லை. இயக்கத்தை துவங்கும்போதே வெளிநாட்டில் இருந்து பணம் பெறக்கூடாது என்று சத்தியம் செய்தவன் நான்.
ஏன் அப்படி ஒரு முடிவு.. சத்தியம்?
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள். தங்கள் சொந்தமண்ணில் வாழ முடியாமல், மனத்துயரத்தோடு புலம் பெயர்ந்தவர்கள். அவர்களிடம் பிச்சை எடுத்து கட்சி நடத்த விருப்பமில்லை.
ஓ…  புரிகிறது. பொருளாதார நெருக்கடி தவிர வேறு காரணங்கள் உண்டா..
இருக்கிறது.  எங்கள் அமைப்புக்கு ஊடக பலம் கிடையாது.  எங்கள் செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன. உதாரணமாக இந்து நாளிதழை எடுத்துக்கொள்ளுங்கள். அதில்  விபத்தில் யாரேனும் அடிபட்டால் செய்திவெளியிடுவார்கள், கஞ்சா கடத்தப்பட்டால் செய்தியாக வெளியிடுவார்கள்.. ஆனால் எங்களைப் பற்றி செய்தி வெளியிடமாட்டார்கள்.
நான் அரசியலைவிட்டே விலகுகிறேன்.. பொதுவாழ்க்கையைவிட்டே விலகுகிறேன் என்று அறிவித்ததுகூட அவர்களுக்கு செய்தியாக இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எனக்கு பழைய நினைவு ஒன்று வருகிறது. அப்போது தி.மு.கழகம், வளர் பருவத்தில் இருந்த காலம். சட்டமன்றத்தில் அண்ணா எவ்வளவு சிறப்பான உரையை நிகழ்த்தினாலும் இந்து இதழில், “annadurai also spoke in the assembly”   என்று ஒருவரி செய்திதான் போடுவார்கள். பிறகு எட்டுகால செய்தி போடும் அளவுக்கு தி.முக. வளர்ந்தது.
அவ்வளவு ஏன், திரைப்பட நடிகர் ரஜினியை எடுத்துக்கொள்ளுங்கள். தங்க இடமின்றி எல்.ஐ.சி. கட்டிடம் முன் இரவு நேரங்களில் படுத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். அந்த சமயத்தில் எந்த ஊடகமாவது அவரை திரும்பிப் பார்த்ததா. அதே ரஜினி  பெரிய நடிகர் ஆன பிறகு அவர் தும்மினாலும் செய்தி, இருமினாலும் செய்தி என்று வெளியிடுகின்றன.
அதாவது, வளர்ந்தவர்களை வைத்து தாங்கள் வளர நினைக்கின்றன ஊடகங்கள். இந்த நிலையில் எங்களது செய்திகள் மக்களிடம் சென்றுசேர முடியாத நிலை ஏற்பட்டது.
நீங்களே “ரௌத்ரம்” என்ற இதழைத் துவங்கினீர்களே..
அது ஒரு தனிக்கதை…
( தமிழருவி மணியனின் பதில்கள்… தொடரும்..)
பேட்டி: டி.வி.எஸ். சோமு https://www.facebook.com/reportersomu