பனாஜி,

கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களும், பாரதியஜனதா 13 இடங்களும் வெற்றி பெற்றன.

மகாராஷ்டிரா வாடி கோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்கள் பாரதியஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து ஆட்சி அமைக்க தேவையான 21 உறுப்பினர்களின் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்ததால், ஆட்சி அமைக்க பா.ஜ. உரிமை கோரியது. அதையடுத்து கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில் கோவால் பாஜ ஆட்சி அமைக்க தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் அவசர வழக்கு தொடர்ந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து, நாளை மறுதினம் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க கோவா முதல்வருக்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து இன்று மாலை கோவா முதல்வராக மனோகர்  பாரிக்கர் பதவி ஏற்கிறார்.

இந்நிலையில், பாரிக்கருக்கு எதிராக கோவா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போல, கோவாவிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறும்போது, நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த சுயேச்சைகள் மற்றும், மாநில கட்சிகள், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரசுக்குத்தான் ஆதரவு அளிப்போம் என்று கூறினார்கள். ஆனால், தற்போது பணம் வாங்கிக்கொண்டு, பாரதியஜனதாவுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

அவர்கள் பாரதியஜனதாவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து, மாநிலத்தில் காங்கிரசே ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் கூறினர்.

மேலும்,  போராட்டத்தின்போது,  பாரிக்கரே டில்லிக்கு திரும்பி போ, எங்கள் ஓட்டு எங்களுக்கு திரும்ப வேண்டும் என்று  எழுதப்பட்ட பதாதைகளையும், கோஷங்களும் போட்டு போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

போராட்டத்தில் ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும், பெண்களும் கலந்துகொண்டு போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இதே நிலை நீடித்தால், கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவி ஏற்றாலும், நாளை மறுதினம் நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சுயேச்சைகள் மற்றும் மாநில கட்சிகள் தங்கள் கொடுத்த  ஆதரவை விலக்க நேரிடும், அதன் காரணமாக பாரிக்கர் அமைச்சரவை கவிழும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.