அமெரிக்காவிற்கு செல்ல விண்ணப்பிக்கும்  பயணிகள் தங்களது சமூக வலைதள பக்கத்தின் விவரங்களை கட்டாயம்  இணைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடி முடிவகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்களை அங்கிருந்து அனுப்பிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்.  மேலும் ஆறு  இஸ்லாமிய நாடுகளுக்கான விசாவை டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா வர விசா கேட்டு  விண்ணப்பிப்பவர்கள், இனி தங்களது சமூக ஊடக கணக்குகளை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அப்படி செய்யாவிட்டால் அமெரிக்க விசா கிடைக்காது.

இது பயங்கரவாதிகளை கண்டறிய உதவும் ஒரு முயற்சி என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும்,  விசா விண்ணப்பிக்க வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த பயணங்களுக்கு செய்த செலவுகளுக்கான நிதி ஆதாரங்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் புதிதாக விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தகவல்களால், பயணிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த இயலும் என்றும், , பயங்கரவாதக் குழுக்களை சமூக ஊடக செயல்களை வைத்து கண்டுப்பிடிக்கவும் பயன்படும் என்றும் அமெரி்க்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தால் அவர்களுக்கு விசா வழங்கப்படாது எனவும்  கூறப்படுகிறது.