தமிழகஅரசின் தலைமைச் செயலாளரின் சொந்த கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை! கவனிக்குமா தமிழக அரசு…..

சேலம்:

மிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலராக பணியாற்றி வரும் கே.சண்முகத்தின் சொந்த  கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை கோரி கடந்த  20 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போராடி வருகிறார்கள். இனிமேலாவது தமிழக அரசு கவனம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்துவந்த  கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து  தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வாழப்பாடியை சேர்ந்த முன்னாள் நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக முன்னாள் நிதித்துறை செயலராளர் கே. சண்முகம் கடந்த ஜூன் 30ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவரது சொந்த ஊர் வாழப்பாடி அருகிலுள்ள துக்கியாம்பாளையம். இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, பேருந்து வசதியில்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தங்களது பகுதிக்கும் பேருந்த இயக்கக்கோரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, முதல்வர் முதல் மாவட்ட ஆட்சியர் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனார். ஆனால், இதுவரை யாரும் அந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்ய முன்வரவில்லை.

இந்த நிலையில், தற்போது துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பதால், அவரால் இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

சண்முகத்தின் சொந்தஊரான  வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட துக்கியாம்பாளையம், மாரியம்மன்புதுார், மேலுார் கிராமங்களும், அத்தனுார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியூர் மற்றும் சந்திரபிள்ளைவலசு ஊராட்சி அரசன்குட்டை, சமத்துவபுரம் ஆகிய கிராமங்கள், மெயின்ரோட்டில் இருந்த விலகி உட்புறமான பகுதிகளில் உள்ளதால், இங்குள்ள மக்கள் அவசர தேவைகளுக்காக வெளி இடங்களுக்கு செல்ல கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

தங்களின் விவசாய பொருட்களை விற்பனை செய்ய எடுத்துச் செல்லவும்,  அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், அவசரமாக மருத்துவமனைக்கு செல்லவும் பெரதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளி மாணவ மாணவிகள் மேல்படிப்புக்கு அருகிலுள்ள வாழப்பாடி மற்றும் நகர் பகுதிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே தங்களது கிராமங்களுக்கு உடனடி பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ,கடந்த 15 ஆண்டுக்கு முன், வாழப்பாடி யில் இருந்து துக்கியாம்பாளையம், மேலுார், மாரியம்மன்புதுார், அரசன்குட்டை, பள்ளத்தாதனுார் வழியாக ரெங்கனுார் வரையும்,  மன்னாயக்கன்பட்டி, மாரியம்மன்புதுார், பள்ளத்தாதனுார் வழியாக நடுப்பட்டி வரையும் 4 வழித்தடத்தில், 5 தனியார் சிற்றுந்துகள் (மினிபஸ்) இயக்க அப்போதைய தமிழக அரசுஅனுமதி வழங்கியது. ஆனால், 4 தனியார் பேருந்துகள் குறுகலான சாலை, பயணிகள் எண்ணிக்கை குறைவு என்ற காரணங்களை காட்டி சேவையை நிறுத்தி விட்டன. ஒரே ஒரு தனியார் மினி பஸ் மட்டும் அவ்வப்போது வந்து செல்கிறது.

இந்த நிலையில் தங்களது கிராமங்களுக்கு அரசு பேருந்து இயக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தங்களது பகுதியைச் சேர்ந்தவர் தலைமைச் செயலாளராக இருப்பதால், உடனே பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினர், மாரியம்மன்புதுார் இரா.முருகன், பா.ம.க., ஒன்றிய செயலாளர் பச்சமுத்து ஆகியோர்  கூறும்போது,  போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ., துாரத்திலுள்ள துக்கியாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன்புதுார், மேலுார் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு இன்றளவும் பேருந்து போக்குவரத்து வசதியில்லை. அதனால், மாணவ–மாணவியர், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாங்கள் அரசு பேருந்து  இயக்கக்கோரி, 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். பல முறை அரசு போக்குவரத்துத் துறைஅதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மனுகொடுத்து  இருக்கிறோம். தற்போது,  எங்களது கிராமத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி க.சண்முகம் தமிழகத்தின் தலைமைச் செயலராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நேரத்திலாவது எங்களது கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் நம்பிக்கை நிறைவேறுமா? தலைமைச் செயலாளர் தனது சொந்த கிராம மக்களுக்கு அரசு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்…..