Random image

ஒரே நேரத்தில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலுக்கு வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் ஆணையர்

டில்லி:

ரே நேரத்தில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை நடத்த மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதற்கு தற்போது  வாய்ப்பில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்து உள்ளார்.

காலநேரம் விரயம் மற்றும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்கான தேர்தல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் யோசனை கூறியது. மத்திய பாரதியஜனதா  அரசும் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டமன்ற தேர்தல்களையும் நடத்த முடியுமா என்பது குறித்து நிதிஆயோக், மத்திய சட்ட ஆணையம், தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.

அதைத்தொடர்ந்து, தேர்தல் வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் வாங்குவதற்கு தேவையான  நிதியை மத்திய அரசு ஒதுக்கினால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல்கமி‌ஷன்  மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியது.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு இரு தேர்தல்களும் சேர்த்து நடத்த வாய்ப்பில்லை என்றும்,   2024ம் ஆண்டில் இருந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது.இதன் காரணமாக மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில்  செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், மாநில சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது வாய்ப்பில்லை என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றினால் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு  ஏற்படும் என்றும் கூறி உள்ளார்.