மு.க.ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பில்லை: மு.க.அழகிரி

சென்னை:

நாளை மறுதினம் (5ந்தேதி) சென்னையில் கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்துள்ள மு.க. அழகிரி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பில்லை  என்று கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் பதவிச்சண்டை வீதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கட்சி விரோத நடவடிக்கைகளால்  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

தனது பலத்தை நிரூபிக்க வரும் 5ந்தேதி சென்னையில் மிகப்பெரிய பேரணி நடைபெறும் என்றும், இதில் சுமார் 1 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்றும் கூறியிருந்தார். இது திமுகவில் சலசலப்பை உண்டுபண்ணியது.

இதைத்தொடர்ந்து கருணாநிதி குடும்பத்தினர் மேற்கொண்ட சமரச முயற்சி காரணமாக, மு.க.அழகிரி பணிந்து வந்தார்.  தன்னை மீண்டும் திமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டால், ஸ்டாலினை திமுக ததலைவராக தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார். இது வியப்பை ஏற்படுத்தி வந்தது.

ஆனால், அழகிரியின் அறிவிப்பு குறித்து திமுக தலைமையோ, ஸ்டாலினோ எந்தவித ரியாக்ஷனும் செய்யவில்லை. இதை யொட்டி, 5ந்தேதி சென்னையில் பிரமாண்ட கூட்டத்தை கூடும் முயற்சியில் மு.க.அழகிரி ஈடுபட்டு வருகிறார்.

‘கலைஞர் கட்டிக் காப்பாற்றிய கட்சியை நான் உடைக்க மாட்டேன். ஆனால், தி.மு.க-வில் எனக்கும் உரிமை உண்டு. அதை நிலைநாட்டாமல் விட மாட்டேன்’ என்று சொல்லி வரும் அழகிரி சில ஆண்டுகளாக தி.மு.க கரை வேட்டி கட்டுவதில்லை.

ஆனால், வரும்  5ம் தேதி சென்னை பேரணியில் அழகிரி தி.மு.க கரைவேட்டி கட்டுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருப்பதை தவிர்த்து,  திருச்சி, நாகப்பட்டினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாளை அழகிரி நடத்தும் பேரணியை தொடர்ந்துதான், மு.க.அழகிரி திமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா அல்லது, அழகிரிக்கு  ஆதரவாக வரும் திமுக நிர்வாகிகள் கட்சியில் நீக்கி வைக்கப்படுவார்களா என்பது திமுக தலைமை முடிவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வந்துள்ள மு.க.அழகிரி, தான் மு.க.ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறி உள்ளார்.

You may have missed