சென்னை:  கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர் வழக்குகளை அடுத்து, 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் திட்டமிட்டுள்ளபடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 9ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டன. அதில் வார்டு வரையறை, உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றமும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே தேர்தல் நடைபெற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. எனவே அந்த ஆணைப்படி கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அட்டவணையின்படி எந்தவித மாற்றமும் இன்றி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.