வேலூர்:

வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுக பொருதுளாளர்  துரைமுருகன் கூறி உள்ளார்.

கடந்த 30ந்தேதி முதல் வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும், வேலூர் தொகுதி வேட்பாளரும், துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரியில் இருந்து ரூ.10 லட்சம் அளவிலான பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அதிரடி ரெய்டின்போது, துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக செயலாளருக்கு சொந்த சிமென்ட் குடோன் மற்றும் திமுக வினர் வீடுகளிலும் இருந்தும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 15 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், வருமான வரிச்சோதனை குறித்து பேசிய துரைமுருகன், இது  தப்புக்கணக்கு; முட்டாள்த்தனமான நடவடிக்கை என்று கடுமையாக விமர்சித்தார்.

வருமானவரி சோதனை முழுக்க அரசியல் கணக்குதான்; என்னை அடக்க நினைத்தாலும் தொண்டர்களின் அன்பு போதும் என்றவர்,  வருமானவரித்துறையினர் வந்தார்கள், கேட்டார்கள், சென்றார்கள்; பதில் கூறினோம் என்றவர்,  கடந்த 3 நாட்களாக வாக்கு கேட்கச் செல்ல முடியாமல் தடுத்துள்ளனர். இப்படி தடுப்பதால் நாங்கள் மனச்சோர்வு அடைந்துவிடுவோம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற ஒரே அரசியல் நோக்கத்துக்காக இந்த சோதனை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னதால் சென்று விட்டார்கள்.

எப்படியும் கதிர் ஆனந்த் வெற்றிபெறக்கூடாது என்பதற்காகவும் வேலூர் மக்களவைத் தொகுதியில் 2 சட்டப்பேரவை இடைத் தேர்தலை (குடியாத்தம், ஆம்பூர்) நடத்தவிடாமல் தடுக்க நினைக்கின்ற னர். வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.