எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை! வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தகவல்..

பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், வடகொரியாவில் மட்டும் தொற்றே இல்லை என்று தொடர்ந்து கூறி வருவது ஏற்கும்படியாக இல்லை என பல நாடுகள் தெரிவித்து உள்ளன.

ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ். தற்போது, கொரோனா வைரசின் 2வது அலை மீண்டும் பரவி வருகிறது. ஆனால் வடகொரியா,  எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை, வைரஸால் யாரும் பாதிப்படையவில்லை என தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் கூறி வருகிறது.

மர்மதேசமான வடகொரியான் நடவடிக்கை புரியாத புதிராகவே தொடர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தடையை மீறி அணுஆயுத சோதனைகள் நடத்தி அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு சவால்விடுத்து,  அணுகுண்டு போரை நடத்த இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  பின்னர் அணுகுண்டை ஒழிக்கப்போவதாக கூறி டிரம்புடன் கை கோர்த்தார்.

இந்த நிலையில், சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், வடகொரியா மட்டும், இந்த விஷயத் தில் அமைதியாகவே இருந்து வந்தது. அங்கிருந்து எந்தவொரு தகவலும்  வெளியிடப்படவில்லை. அதுபோல, அதிபரும் வெளியே தலைகாட்டாத நிலை ஏற்பட்டது. இதனால்,   இந்த நிலையில் கடந்த ஓராண்டாக எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை, வைரஸால் யாரும் பாதிப்படையவில்லை என தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா கூறி வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதியாக இருக்கும் எட்வின் சால்வடார் (Edwin Salvador), `வடகொரியாவில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி 23,121 பேரை தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் தொற்று இல்லை என்று உறுதியானதும் அரசால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2020 மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதிவரை பரிசோதனை செய்யப்பட்ட 732 பேருக்கான சோதனை முடிவுகளை அரசு வெளியிடவில்லை” என்றார். மேலும் “இதுவரையில் எத்தனைபேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது போன்ற எந்தத் தகவலையும் எங்களிடம் (உலக சுகாதார அமைப்பிடம்) அரசு கூற மறுக்கிறது” என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால்,  வடகொரியா நாடு  கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் 19 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஐ.நா-வின் கொரோனா நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் பெற்றிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக, வருகிற ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் நடைபெறும், ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என தெரிவித்திருக்கிறது . இருந்தாலும், வடகொரியாவில் வடகொரியாவில் கொரோனா இல்லை என்றே அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து மறுத்து வருகிறார்.