புத்தர் நேபாளத்தில் பிறந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை! இந்தியா தரப்பில் விளக்கம்


டெல்லி:
புத்தர் நேபாளத்தில் பிறந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை என்று இந்தியா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.  புத்தர் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய கருத்தில் சர்ச்சை எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சனிக்கிழமை (ஆகஸ்டு 8) அன்று நடந்த ஒரு இணைய வழி கூட்டத்தில்  கலந்துகொண்டு பேசும்போது,  இந்தியாவின் தார்மீக தலைமை பற்றி பேசினார். அப்போது அவர் மகாத்மா காந்தி மற்றும் புத்தரின் போதனைகள் இன்றும் நாம் கடைபிடிக்க கூடியவையாக உள்ளன என குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்து, தவறான புரிதல் காரணமாக நேபாள ஊடகங்களில் தவறான முறையில் வெளியானது.  அதேபோல், நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதமரான மாதவ்குமார், நேபாள காங்., செய்தித் தொடர்பாளர் பிஸ்வாஸ் பிரகாஷ் ஆகியோர் ஜெய்சங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த, நேபாள வெளியிறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்பது குறித்து சந்தேகத்திற்கிடமில்லாமல் வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்றும், அப்பகுதி யுனெஸ்கோவின் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய கருத்து குறித்து, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது உரையில், புத்தரை பற்றியும் குறிப்பிட்டார் என்றார். ஆனால்புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தரின் காலத்தில், நேபாளம் என்று தனி நாடு இல்லை என்றும், நவீன பீகாரில் உள்ள புத்த கயாவில் ஞானம் பெற்ற பிறகு சித்தார்த்தர், கவுதம புத்தர் ஆனார் என்றும் விளக்கம் அளித்தார்.

2014 ஆம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்திற்கு சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அமைதியின் தூதராக உள்ள புத்தர் பிறந்த நாடான நேபாளம்  என குறிப்பிட்டார்.

நேபாளத்தின் தோன்றிய புத்த மதம், உலகின் பிற நாடுகளுக்கு பரவியது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என இந்திய தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.