“கல்வியில் சமநிலை மறுக்கப்படுகிறது” : மர்மமாக மரணமடைந்த ஜேஎன்யு மாணவரின் ஃபேஸ்புக் பதிவு!

டில்லி :

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம சாவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் எம்.ஃபில் படித்து வந்தார். தன் நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாட முனிர்க்கா என்ற பகுதிக்கு சென்ற இவர்,  தூங்கப்போகிறேன் என்று நண்பர்களின் அறைக்கு சென்றுள்ளார்.  வெகு நேரமாக கதவு தாழிடப்பட்டிருப்பதை கண்டு அவரது நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர்.   கதவு திறக்கபடாததால் காவல்துறைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.                                 

உயிரிந்த முத்துக்கிருஷ்ணனது  உடலை பிரேத பிரசோதனைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார்  அனுப்பி வைத்தனர்.   இதனிடையே  முத்துக்கிருஷ்ணன் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.52 மணிக்கு தன் முகநூல் பக்கத்தில் தற்போதைய கல்வியின் நிலை குறித்து எழுதியுள்ளார். அதில், எம்.ஃபில், பிஎச்டி மாணவர் சேர்க்கையில் சமத்துவம் இல்லை என்றும், கல்லூரியன் வாய்மொழித்தேர்விலும் சமத்துவம் இல்லை என்றும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அவர், கல்லூரியில் மாணவர் போராட்டமும் மறுக்கப்பட்டது. சமத்துவம் மறுக்கப்படுகிறது என்றால் எல்லாமும் மறுக்கப்படுகிறது என்று தன் பதிவை நிறைவு செய்துள்ளார். உயிரிழந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவர் ரோஹித் வெமுலாவின் நண்பர் என்று கூறப்படுகிறது.

ரோஹித் வெமுலா உயிரிழந்தபின் பல்வேறு போராட்டங்களில் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்று வந்தார். இவர் தீவிர அம்பேத்கர் ஆதரவாளர் என்றும், எல்லோரிடமும் இயல்பாக பழகும் பண்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த அவரது தந்தை ஜீவானந்தம், முத்துக்கிருஷ்ணன் தைரியமான பையன் என்றும், அவன் நிச்சயமாக தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டான் என்றும் தெரிவித்தார். மேலும் முத்துக்கிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published.