‘துக்தே துக்டே கும்பல்’ குறித்து எந்த தகவலும் இல்லை: மோடி, அமித்ஷாவின் மூக்கை உடைத்த உள்துறை அமைச்சகம்!

டெல்லி:

‘துக்தே துக்டே கும்பல்’ குறித்து எந்த தகவலும் இல்லை என்று உள்துறை அமைச்சகம், ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இதன் காரணமாக பிரதமர் மோடி மற்றும் உள்துதுறை அமைச்சர் அமித்ஷாவின் பொய் அம்பலமாகி உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பாஜக தலைவர்கள், கூட்டங்கள்தோறும் ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களை குறிப்பிட்டு ‘துக்தே துக்டே கும்பல்’  என்று விமர்சித்து வரும் நிலையில், அமித்ஷா பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சகமே, அப்படி ஒரு கும்பல் இல்லை என்று தெரிவித்து உள்ளது… பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர்  மோடியும் அமித் ஷாவும் அடிக்கடி மேடையில் பாஜகவினரை குஷிப்படுத்தும் நோக்கில், தங்களை எதிர்ப்பவர்களை “துக்டே துக்டே கேங்” (அதாவது சில்லறைத்தனமான கும்பல்) என்று முழங்கி வருகின்றனர்.

பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்தியஅமைச்சர்கள், அரசுக்கு எதிராக போராடுபவர்களை,  நகர்ப்புற நக்சல்கள், ஆன்டி இந்தியன்,  தேசவிரோதிகள், துக்டே துக்டே கும்பல் மற்றும் லிப்டார்ட்ஸ்,  என பல பெயர்களில் விமர்சித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பாளர்கள் தரப்பில் அவ்வப்போது பதில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் உச்சத்தின் போது, ​​உள்துறை அமைச்சர் அமித் ஷா, துக்டே-துக்டே கும்பல் வன்முறைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

“காங்கிரஸ் தலைமையிலான துக்தே-துக்டே கும்பலை தண்டிக்க வேண்டிய நேரம் இது என்று நான் கூற விரும்புகிறேன். நகரத்தில் வன்முறைக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். டெல்லியில் உள்ள மக்கள் அவர்களை தண்டிக்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

முன்னதாக, 2019 மே மாதம் நடந்த தேர்தல் பேரணியின் போது, ​​“தேஷ் கோ துக்தே துக்தே கர்னே வாலே கே சாத் காங்கிரஸ் காதி ஹை” என்று கூறியபோது, ​​பிரதமர் நரேந்திர மோடியும் அத்தகைய கும்பல் இருப்பதாக பேசியிருந்தார்.

சமீபத்தில் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடைபெற வன்முறையின்போது, துக்டே துக்டே கும்பல் என்ற பேச்சு பிரபலமானது. மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், ஜென்யு மாணவர்களை சந்தித்து பேசியது குறித்தும் பாஜக தலைவர்கள் விமர்சித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  ஜே.என்.யூ.வில் நடந்த தாக்குதல் சம்பவத்தை புகைபடம் மூலம் பார்த்தேன். அங்கு நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. “நான் ஜே.என்.யூ வில் படித்தபோது, இப்படி ஒரு ‘துக்டே துக்டே’ ( நாட்டை துண்டாட நினைப்பவர்கள் ) கும்பலை நாங்கள் பார்த்ததில்லை. இது போன்ற சம்பவம் பல்கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முற்றிலும் எதிரானது என்று கூறியிருந்தார்.

பாஜக தலைவர்களின் பேச்சுக்கு  பதில் அளித்த கன்னையாகுமார்,  “அவர்கள் (பாஜகவினர்) எங்களை துக்டே துக்டே கும்பலின் உறுப்பினர்கள் என்று அழைக்கிறார்கள். முகத்தை மறைக்காமல் நான் இங்கே சாலையில் நிற்கிறேன், ஆம் நான்  துக்டே துக்டே (சிறு சிறு) கும்பலின் தலைவர் என்பதை மரியாதையாக எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான்,  துக்டே துக்டே கும்பல் என்ற   வார்த்தைக்கு என்ன அர்த்தம் யாரை குறிப்பிடுகிறார் கள், “துக்தே துக்தே கும்பலின் தோற்றம் என்ன? சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஏன் தடை செய்யப்படவில்லை? அதன் உறுப்பினர்கள் யார்?”  என்று தகவல் உரிமை சட்டம் மூலமாக சமூக ஆர்வலர் கோகலே என்பவர்  கேள்வி எழுப்பியிருந்தார்.  இதுகுறித்து ஜனவரி 26ந்தேதிக்குள் பதில் அளிக்க உள்துறை அமைச்சகத்துக்கு ஆர்டிஐ அறிவுறுத்தியது. இது  உள்துறை அமைச்சகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உள்துறை அமைச்சகம்  தற்போது பதில் தெரிவித்து உள்ளது.

அதில், ‘துக்தே துக்டே கும்பல்’ குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்து உள்ளது.  உள்துறை அமைச்சகத்தின்படி, அத்தகைய கும்பல் இல்லை என்று  ஆர்டிஐக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், “துக்தே-துக்டே கும்பல் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு எந்த தகவலும் இல்லை” என்று தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள கோகலே,   “” துக்டே துக்டே கும்பல் “அதிகாரப்பூர்வமாக இல்லை, அது அமித் ஷாவின் கற்பனையின் ஒரு உருவம் மட்டுமே.” என்று விமர்சித்து உள்ளார்.

ஏற்கனவே, துக்டே துக்டே கும்பல் என்ற வார்த்தையை வலதுசாரி கும்பல்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன.  தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகாதவர்களை, இந்த வார்த்தைகளைக் கொண்டு, தேச விரோதிகள் என்று  முத்திரை குத்தி வருகின்றனர்

சிறந்த கல்வியாளர்களோ அல்லது பொருளாதார மேதைகளோ மிகப்பெரிய பதவியில் இருப்பார்களேயானால் இது போன்ற அபத்தமான வார்த்தைகளை ஒருபோதும் பேசமாட்டார்கள். ஆனால் இன்று மத்தியில் ஆட்சி செய்து வரும் தலைவர்களே, துக்டே துக்டே கும்பல் என்று தரம் தாழ்ந்து விமர்சித்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு, உள்துறை அமைச்சகமே எதிராக பதில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.