டில்லி:

த்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஏராளமான மாணவ மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து எந்தவித  தகவலும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெனாவெட்டாக பதில் அளித்து உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில், திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்களான  செல்வராஜ், மாணிக்கம் தாகூர், ஆ.ராசா ஆகியோர் மத்திய அரசிடம் நீட் தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

அதில், எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியிருக்கிறார்கள், அவர்கள் எதிர்பார்க்கும் சலுகை என்ன?  தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் பல தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. அதுபோல நாடு முழுவதும் நடைபெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை என்ன? அவர்கள் தற்கொலை செய்வதற்கான காரணங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதற்கு எழுத்துமூலம் பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை மற்றும்  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளது.

அதில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டுமே  நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஆனால், அவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அந்த மாநிலங்களுக்கு நீட் தேர்வில் எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வால் உயரிழந்தவர்கள் குறித்து எந்தவித தகவலும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு கடைசி வரை தெரிவித்து, நம்பிக்கை துரோகம் செய்த பாஜக அரசு, நீட் தேர்வை உச்சநீதி மன்றத்தின் ஆதரவுடன் கட்டாயமாக அமல்படுத்தியதால், அரியலூர் மாணவி அநியாயமாக தற்கொலை முடிவை நாடினார். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்று மேலும் பல மாணவ மாணவிகள் தற்கொலை முடிவை நாடியுள்ளனர்.

ஆனால், மத்தியஅரசோ, நீட் தேர்வு காரணமாக யாரும் தற்கொலை செய்யவில்லை என்பது போன்ற ஒரு பதிலை தெனாவெட்டாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.