எச்.ராஜாவிடம் அட்வகேட் ஜெனரல் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: உயர்நீதி மன்றம்

சென்னை:

கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக  தமிழக அட்வகேட் ஜெனரல், எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற  விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட  எச்.ராஜா, சென்னை உயர்நீதி மன்றம், காவல்துறையினர் குறித்து தரக்குறைவாக விமர்சித்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம்  தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில்,  தந்தை பெரியார் திராவிட கழக வழக்கறிஞர் கண்ணதாசன், எச்.ராஜா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணிடம் மனு கொடுத்தார். இது மனு குறித்து விளக்கம் அளிக்க  அட்வகேட் ஜெனரல் எச்.ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கண்ணதாசன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.மகாதேவன்,  ‘கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அனுமதி வழங்குவது குறித்து அட்வகேட் ஜெனரல் முடிவு செய்ய வேண்டுமே தவிர, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றும், இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.