மிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்த அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருப்பதாவது:

“தமிழக அரசியலில் என்ன நடக்கிறதென்றே தெரியாத ஒரு குழப்பம் நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில்  பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கும் கருத்துகள் மூலம் பல்வேறு திரைமறைவு செயல்கள் இங்கு அரங்கேறியிருப்பது நமக்குத் தெரியவருகிறது. முதல்வரின் நேர்காணல், மனசாட்சிக்குப் பயந்த ஒரு மனிதனாகத்தான் அவரை நமக்குக் காட்டுகிறது. மற்றவர்களைப் போலப் பதவி கிடைக்கும் என்று அனுசரித்துப் போகாமல் உண்மையை மக்களுக்குச் சொல்லிவிடவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார்.

அவருக்குப் பின்னால் இருந்து பாஜக இயக்குகிறது; மற்ற கட்சிகள் இயக்குகிறது என்பதை நான் ஏற்கவில்லை. மற்ற ஒரு கட்சியால் அவரை இயக்கிவிடமுடியும் என்று நான் நம்பவும் இல்லை. அப்படி ஒரு கட்சி இயக்கினாலும் ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் எழுப்புகிற நியாயமான கேள்விகளுக்குப் பதில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

தான் கட்டாயத்தின் பேரில்தான் பதவி விலகினேன் என்பதையும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க  தன்னை வற்புறுத்தினார்கள் என்பதையும் பாஜக சொன்னதாக ஐயா பன்னீர்செல்வம் கூறவில்லையே!

தன் கட்சியில் இருப்பவர்களே தன்னைத் தேர்வுசெய்துவிட்டுத் தனிப்பட்ட முறையில் தனக்கு மட்டும் அவமானம் ஏற்படுத்தாமல் தான் வகிக்கும் பதவிக்கே களங்கம் விளைவிப்பதாகதான் அவர் குற்றஞ்சாட்டுகிறார். எனவே, எதற்கும் ஆசைப்படாத எளிமையான ஒருவரை மற்ற கட்சிகள் பின்னால் இருந்து இயக்குகிறது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்திலாவது உண்மையைப் பேசினார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் அங்கீகாரத்தோடு இரண்டுமுறை முதல்வராக்கப்பட்ட ஐயா பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து மக்கள் மன்றத்தில் உண்மைகளைக் கூறியிருப்பதற்கு மதிப்பளிக்காமல் தமிழ்ச்சமுகம் எளிதில் கடந்துவிட்டுப் போகமுடியாது!” இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.