சென்னை:

காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசியல் சூழ்நிலைகள் குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விவாதித்தார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி போன்றவற்றை குறித்து இருவரும் விவாதித்தோம். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசினோம். இது முதற்கட்ட சந்திப்பு. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இது குறித்து பேச உள்ளேன். அரசியல் சூழ்நிலை குறித்தும், எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது’’ என்றார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், ‘‘ மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணம் இருக்கும். 2004-ம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை தற்போது சந்தித்து பேசினேன். 3-வது, 4-வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் இல்லை.

நாங்கள் 3-வது அணி இல்லை. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு சரிவர செயல்படவில்லை. எனது சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். மத்திய, மாநில அரசு உறவுகள், மாநில சுயாட்சி குறித்தும், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, அதிகாரங்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலினுடன் விவாதித்தேன்’’ என்றார்.