சென்னை:

சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த ஏப்ரல் மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு அன்று மாலை இரு சமூக தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடிதயடுத்துபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு கொடுத்தது. ஆனால், மறுதேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில், மறுதேர்தல் நடத்த உத்தரவிட கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

இதுதொடர்பாக  சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எங்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ஓட்டு போடுவார்கள் என்பதால் அதை தடுக்க ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதற்காக ஒரு பிரிவினருடன் சேர்ந்து, எங்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்தனர். பலரை கொடூரமாக தாக்கினர். இதனால், மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. எங்கள் குடியிருப்பு பகுதியில் மொத்தம் 678 வாக்காளர்களில், 403 பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். 275 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் போனது.

எனவே, பொன்பரப்பி வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் 24-ந் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மனு கொடுத்தேன். ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. எனவே, பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  கடந்த விசாரணையின்போது, “மனுதாரரின் கோரிக்கையை 21-ந்தேதிக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.