வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கல்லூரி, பள்ளிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் காட்பாடி காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அவரது வீட்டிர் ரெய்டு நடைபெற்றது வீடியோக்கள், புகைப்படங்கள்  ஊடகங்களிலும், சமுக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக காவல் துறையில்  புகாரர் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக  வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியது.

ஆனால், காட்பாடியில் உள்ள துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் தொகுதி வேட்பாள ரான கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களிலோ எந்தவித பணமும் கைப்பற்றப்பட வில்லை என்பது போன்று காவல்துறையில் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

கடந்த வாரம் காட்பாடியில் உள்ள  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட சோதனையின்போது, துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், . திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, திமுக பிரமுகரின் தனியார் சிமெண்ட் குடோனில் இருந்து கட்டு கட்டாக  பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த பணம் அனைத்தும் துரைமுருகன் சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து  காட்பாடி காவல் நிலையத்தில், துரைமுருகன் மகன்  கதிர் ஆனந்த், சீனி வாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171(E)-, 171 (B)(2) IPC. 125(A)PPL ACT ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வேலூர்  டிஎஸ்பி சங்கர், காவல் ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி ஜெய சுதாகருடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (FIR) யில் துரைமுருகன் இல்லத்திலோ அல்லது அவரது கல்லூரிகளிடமோ எவ்வித பறிமுதல் செய்யப்பட வில்லை என்று வருமான வரித்துறை கூறியிருப்பதாக பதியப்பட்டுள்ளது. 

முதல்தகவல் அறிக்கையின்படி, தாமோதரன், சீனிவாசன் ஆகியோரிடம் இருந்தே பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலில் துரைமுருகன் வீட்டில் இருந்தும், அவருக்கு சொந்த இடங்களில் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய தேர்தல் ஆணையம் தற்போது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையில் துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும், தமிழக தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? ஏன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது….

பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறதோ… என்ற மக்கள் மனதில் தோன்றி உள்ளது… இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது….

என்னமோ நடக்குது… அது மர்மமாகவே இருக்குது… என்ற பாடல் வரிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.