விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை! அருண் ஜெட்லி கறார்!

டில்லி,

நாடு முழுவதும் வறட்சி தாண்டவமாடுவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

பருவ மழை பொய்த்து போனதன் விளைவாக நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சி காரணமாக வும் இறந்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக  41 நாட்கள் டில்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும், மத்திய அரசு தனது நிலையில் இருந்து இறங்கி வரவில்லை.

மத்தியபிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டத்தின்போது, துப்பாக்கி சூடு நடைபெற்று 6 விவசாயிகள் மரணமடைந்தனர்.

மேலும் பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருசில மாநிலங்களில் விவசாயிகள் கடனை மாநில அரசே தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி.

 ‘நாடு முழுவதிலும் இருக்கும் விவசாயிகள், கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி வருகின்ற னர். ஆனால், ‘விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய எந்த முகாந்திரமும் இல்லை’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.