ர்.கே. நகர் தொகுதியில பாஜக சார்பா அறிவிக்கப்பட்டிருக்காரு கங்கை அமரன்.  திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர்னு பன்முகம் கொண்ட சினிமா நட்சத்திரம்!

படார்னு எனக்கு பழைய ஞாபகம் வந்துச்சு. ஒரு முறை மதுரையில பேட்டி கொடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சினிமா நட்சத்திரங்களை நம்பி பாஜக இல்லை” அப்படின்னு பேசினாரு. அது அப்போ பிக் பிளாஷ் நியூஸா ஓடுச்சு.

அதே மாதிரி தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் சொன்னாரு. அதுவும் படா பிக் பிளாஷ் நியூஸா ஓடுச்சு. அப்போ தமிழிசை என்ன சொன்னாரு தெரியுமா?

நடிகர்களை நம்பி பாஜக இல்லை..

”நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நட்பு அடிப்படையில்தான் போனேன்.  அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று  கேட்டால், வரவேற்போம் என்றுதான் சொல்ல முடியும். இதற்காக பாஜக அவரை இழுக்க முயற்சிக்கிறது என்று சொல்ல முடியாது. அதேபோல் நடிகை குஷ்புவிடம் கட்சிக்கு வரச்சொல்லி ஒருமுறைகூட நாங்கள் பேசவில்லை. அவரும் எங்களுடன் பேசவில்லை. தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலவீனமானர்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஒருவேளை, ‘குஷ்புவே புறக்கணித்துவிட்டார் அதனால் பாஜக பலவீனமானது’ என்று யாராவது சொன்னால் அவர்கள் அப்படியே சொல்லிக் கொள்ளட்டும். நடிகர்களை நம்பி பாஜக இல்லை” அப்படின்னு பேசினாரு.

அந்த சமயத்துல patrikai.com  இதழுக்கு தமிழிசை அளி்ச்ச பேட்டியும் நினைவுக்கு வந்துச்சு.

கேள்வி: அந்த காலத்திலேயே சத்ருகன் சின்ஹா முதல் தற்போது ஸ்மிருதிஇராணி வரை நடிகர்கள் பா.ஜ.வில் இருக்கிறார்களே.. தவிர விஜய் போய் மோடியை சந்தித்தார். மோடி வீடு தேடி வந்து ரஜினியை சந்தித்தார். ஆனால் நீங்கள் நடிகர்களை நம்பி பாஜக இல்லை என்று  சொல்லியிருக்கிறீர்களே..?

தமிழிசை: தலைப்பு அப்படி போட்டுட்டாங்க.. உள்ள படிச்சி பார்த்தா   நான் சொன்ன கருத்து புரியும்.  ஸ்ருதிராணி வெறும் நடிகை மட்டுமல்ல. கட்சியின் அடிப்படை பணியிலிருந்து வந்தவர், மகளிர் அணி தலைவியாக பணியாற்றியவர். இப்போ   எம்.ஜி.ஆரை நடிகர் என்று மட்டும் சொல்ல முடியுமா.. அவர் எவ்வளவு பெரிய தலைவர்!

நான் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே வச்சுகிட்டு அதன் மூலம் முக்கியத்துவம் பெருவதைத்தான் தவறு என்கிறேன்… அதோடு, திரையுலகில் இருந்து வருபவர்கள் என்பதற்காக அவர்களை மட்டுமே புரஜெக்ட் பண்றதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.  காங்கிரஸில் அதுதான் நடக்கிறது.

மற்றபடி நடிகர்களின் பாப்புலாரிட்டி கட்சி இன்னும் பரவலா மக்களிடம் செல்ல உதவும்.

எங்கள் கட்சிக்கு நடிகர்கள்  வந்தால் நிச்சயம் வரவேற்போம். அது அஜீத், விஜய் யாராக இருந்தாலும் சரி.. ! அன்போடு வரவேற்க தயாராக இருக்கிறோம்! “ அப்படின்னு சொல்லியிருக்காரு தமிழிசை.

பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரனுடன் தமிழிசை

அதாவது, “சினிமா கவர்ச்சியை மட்டும் வச்சிகிட்டு  அதன் மூலம் முக்கியத்தும் பெறுவதைத்தான் தவறு என்கிறேன்” அப்படினு சொல்லியிருக்காரு தமிழிசை.

இப்போ  ஆர்.கே. நகர் தொகுதியில பாஜக வேட்பாளரா அறிவிக்கப்பட்டிருக்காரே  கங்கை அமரன்… அவரு எத்தனை வருசமா கட்சி பொறுப்புகள்ல இருக்காரு.. மக்களுக்காக எத்தனை போராட்டங்க நடத்தியிருக்காரு.. எத்தனை முறை சிறைக்குப் போயிருக்காரு..?

நானும் யோசிசிக்கிட்டே இருக்கேன்!