சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில், கடந்த 2016ம் ஆண்டு மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்கரையில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற விதிகளை மீறி ஜெ.வுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது,  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில, சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை.  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைக்கப்பட்டது.  எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்திற்குள் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைய உள்ளதால் விதிமீறல் இல்லை  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சாலையை நோக்கியபடி நினைவிடம் அமைப்பது சட்ட விரோதமல்ல.

இவ்வாறு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.