குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும்! உயர்நீதிமன்றம் பரிந்துரை

மதுரை: குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று  உயர்நீதிமன்றம் மதுரைகிளை  பரிந்துரை செய்துள்ளது. லெட்டர்பேடு கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சையை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணை நடத்தியது. அந்த வழக்கின்போது, வழக்கை தாக்கல் செய்தவர், தான் ஒரு கட்சியின் பிரதிநிதி என குறிப்பிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,  வழக்குக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியதுடன்,  லெட்டர் பேடு அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ‘‘புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது? என்று தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியதுடன்,  குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,  தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் எதிர்தர மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு பதில் அளிக்க வேண்டும். ’’ எனத் தெரிவித்தனர்.