சென்னை: அணியின் டெய்லெண்டர்கள் சிறிது ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், வாஷிங்டன் சுந்தர் சதம் அடித்திருப்பார் என்று ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார் சுந்தரின் தந்தை.

அகமதாபாத்தில், இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில், 96 ரன்கள் அடித்திருந்தார் சுந்தர். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய அக்ஸார் ரன்அவுட் ஆகிவிட, அதற்கடுத்து கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

இஷாந்த் ஷர்மாவும், முகமது சிராஜும் களமிறங்க வேண்டியிருந்தது. அவர்கள், ஓரளவு தாக்குப்பிடித்து நின்றாலே, சுந்தர் சதமடித்து விடுவார் என்ற நிலை. ஆனால், அவர்கள் இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பிவிட்டனர். இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில், தனது முதல் சதவாய்ப்பை அநியாயமாக இழந்தார் சுந்தர்.

மேலும், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும், 85 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக இருந்தார். அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைத்திருந்தால், அவர் சதமடித்திருப்பார். அப்போது, மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த காரணத்தால், அவருக்கான வாய்ப்பு பறிபோனது.

சுந்தரின் தந்தை கூறியுள்ளதாவது, “சுந்தரின் பேட்டிங்கை ஏன் ஆச்சரியமுடன் பார்க்க வேண்டும்? அவர் புதிய பந்தை எதிர்கொள்ளக்கூடியவர்தான். மறுமுனையில் இருந்தவர்களால்தான் நான் ஏமாற்றமடைந்தேன். அவர்களால் சிறிதுநேரம் கூட தாக்குப்பிடித்திருக்க முடியாதா?

ஒருவேளை, இந்தியாவுக்கு 10 ரன்கள் தேவை என்ற சூழலில் இவர்கள் இப்படி செய்திருந்தால் பெரிய தவறில்லையா? டெயிலெண்டர்கள் என்ன செய்தார்கள் என்பதை இளைஞர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது” என்றுள்ளார்.

ஆனால், சுந்தரோ, “சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் சதத்தைப் பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கவில்லை. மாறாக, அணிக்காக நான் பங்களித்ததே மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் சதம் அடிப்பேன்” என்றுள்ளார் அவர்.

அதேசமயம், சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், அஸ்வின் சதமடிப்பதற்கு, கடைசி விக்கெட்டாக இருந்த முகமது சிராஜ் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் 16 ரன்கள் எடுத்து கடைசிவரை நாட்அவுட்டாக இருந்தார்.