இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமையவேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில், ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், ஆசியான் நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, மனிதநேய உதவிகள் மற்றும் அமைதிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இம்மாநாட்டில் இந்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார்.

பின்னர் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் டி எஸ்பரை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனா ராணுவத்தின் செயல்பாடு, இருநாட்டு பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவது பற்றியும், இந்தோ-பசிபிக் பகுதியில் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைகளை மதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு, சர்வதேச விதிமுறைகளின் படி இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்பது தான் இந்தியாவின் தொலைநோக்கு பார்வை என்றும், அதையே ஆசியான் அமைப்பில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளும் விரும்புவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்புக்கு பின்னர் சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், “அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சருடான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது பற்றியும் நாங்கள் பேசினோம்” என்று தெரிவித்துள்ளார்.