மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசுடன் தகவல்கள் பரிமாறக்கூடாது : மம்தா பானர்ஜி உத்தரவு

கொல்கத்தா

மேற்கு வங்க அரசு அதிகாரிகள் மத்திய அரசுடன் தகவல்கள் பரிமாறிக் கொள்ள கூடாது என முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் சேமிக்கப்படும் அனைத்து விவரங்களை கண்காணிக்கவும் மற்றும் பரிமாறப்படும் தகவல்களை பார்க்கவும் 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குவாக தெரிவித்தது இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இந்த நடவடிக்கை மூலம் அரசு மக்களை வேவு பார்ப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அரசு அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார். அந்த கூட்டத்தில் மம்தா, “மாநில அரசிடமிருந்து தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு பெற்றுக் கொண்டு அதை மத்திய அரசின் சாதனைகளாக விளம்பரப்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் மூலம் பெறப்படும் விவரங்களைக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு உண்மையில் அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை.

இனி மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு எந்த ஒரு தகவலோ, புள்ளி விவரமோ அளிக்கக் கூடாது. அத்துடன் மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசிடம் இருந்தும் எந்த ஒரு தகவலோ புள்ளி விவரமோ பெறக் கூடாது. மாநில அரசுகளை கட்டுப்படுத்த எண்ணும் மத்திய அரசுக்கு நாம் துணை போகக் கூடாது. மத்திய அரசைப் போல் மாநில அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி