இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பல வளர்ச்சி திட்டங்களுடன் தயாராக உள்ளோம்….பாகிஸ்தான்

--

இஸ்லாமாபாத்:

நியூயார்க்கில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையில் போது கர்தார்பூர் சாஹிப் புனித ஸ்தல வழித்தடத்தை எளிமையாக்கும் திட்டம் இருந்தது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா பொது சபை கூட்டத்தின் போது இந்தியா&பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காஷ்மீரில் 3 போலீசார் கடத்தி கொலை செய்யப்பட்டது, எல்லையில் ஒரு ராணுவ வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு வெளியாகிய 24 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்,பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாவாத் சவுத்ரி கூறுகையில்,‘‘நியூயார்க்கில் இந்தியா&பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பின் போது பல விஷயங்கள் குறித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான விஷயங்களும் இதில் அதிகம் இருந்தன.

குறிப்பாக கர்தார்பூர் சாஹிப் புனித ஸ்தல வழித்தடத்தை எளிமையாக பயன்படுத்தும் வகையில் திட்டம் இருந்தது. எங்களது தரப்பில் இருந்து இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டு தரிசிக்க வந்து செல்லும் வகையில் எளிமையாக்கும் திட்டம் உள்ளது.

அதேபோல் பத்திரிக்கையாளர்களும் எளிதாக பாகிஸ்தான் வந்து செல்லும் திட்டம் கைவசம் உள்ளது. இந்தியாவுடன் உகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் மோடி கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.