பிரிஸ்பேன்: இந்திய அணியை நெருக்கடியிலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவதும் தனது நோக்கமாக இருந்தது என்று கூறியுள்ளார் ஷர்துல் தாகுர்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டின் மூன்றாம் நாளில் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து பேட்டிங் செய்த ஷர்துல் தாகுர், 67 ரன்களை அடித்து அவுட்டானார். இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது அவரின் அந்த ரன்கள்.

இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “ஒரு கடினமான சூழலில் நான் களமிறங்கினேன் என்பது எனக்குத் தெரியும். நான் அதை மறுக்கவில்லை. மைதானத்திலிருந்த கூட்டமானது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்காக ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

ஆனால், ஒருநாள் தொடரின்போது, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியது நினைவுக்கு வந்தது. ‘நீ இந்த நாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடினால், இங்கே உனக்கான வெகுமதி கிடைக்கும்’ என்பது. எனவே, ஆஸ்திரேலிய ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவதும் எனது நோக்கமாக இருந்தது.

கடைசியில், இந்த நாளின் முடிவில் எனது ஆட்டமானது எனது அணிக்கு பெரிய உதவிகரமாக அமைந்தது என்பது எனக்கான பெரிய மகிழ்ச்சி. கூட்டத்தினர் எதிரணிக்காக ஆரவாரித்துக் கொண்டிருக்கலாம். அதேசமயம், நாம் சிறப்பாக ஆடினால், அவர்கள் நமக்காகவும் ஆரவாரிப்பார்கள்” என்றுள்ளார் ஷர்துல்.