Random image

2019ல் பெரிய பொருளாதார சவால்கள் உண்டாகும் : டாடா நிறுவனம் எச்சரிக்கை

மும்பை

டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் வரும் 2019ல் பெரிய பொருளாதார சவால்களை சந்திக்க நேரிடும் என தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.   இந்த நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன்.   இந்த நிறுவனத்தில் சுமார் 7 லட்சம் பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.   அதில் 1,86,000 பேர் பெண் ஊழியர்கள் ஆவார்கள்.   நாட்டில் அதிக அளவில் பெண் ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் டாடாவும் ஒன்றாகும்.

நேற்று சந்திரசேகரன் தனது தொழிலாளர்களுக்கு புத்தாண்டு அறிக்கையை அளித்துள்ளார்.   சந்திரசேகரன் தனது அறிக்கையில், “கடந்த 2018 ஆம் ஆண்டில் நாம் பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்துள்ளோம்.  வரும் 2018 ஆம் ஆண்டில் நாம் 10.000 கோடி டாலர்கள் ஈட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்காக நாம் உலகெங்கும் உள்ள அனைத்து இனங்களையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

வரும் 2019 ஆம் வருடம் நாம் மிகப்பெரிய  பொருளாதார சவால்களை சந்திக்க நேரிடும்.    இந்த சவால்கள் உலகெங்கும் உண்டாக வாய்ப்புள்ளது.   தற்போதுள்ள போட்டி நிறைந்த உலக அரங்கில் நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளொம்.   தற்போது இந்திய பொருளாதாரம் மிகவும் அபாயத்தில் உள்ளது.   சீனப் பொருளாதார வளர்ச்சி சரிவால் உலகெங்கும் கடும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

உலக பொருளாதாரம் குறித்து தற்போது எந்த ஒரு கருத்தும் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.   புதிய புதிய வர்த்தகங்களினால் நாம் ஒரு ஸ்திர நிலை இல்லாதபடி உள்ளோம்.   அத்துடன் வர உள்ள மக்களவை தேர்தலின் முடிவுகளும் பொருளாதார தாக்கத்தை உண்டாக்கும்.  நாம் இப்போது ஒரு தொடர் ஓட்டபந்தயத்தில் உள்ளோம்.   ஆகவே நிறுத்தாமல் ஓடினால் தான் வெற்றி அடைய முடியும்.

தற்போதுள்ள நிலையில் டாடா நிறுவனங்களை சீரமைக்க நமக்கு ரூ. 70000 கோடி தேவைப் படுகிறது.  நமது உழைப்பின் மூலம் அதை சம்பாதித்தாக வேண்டும்.   நான் எப்போதுமே எனது ஊழியர்களே எனது மிகப் பெரிய சக்தி என்பதை அறிவேன்.    ஆகவே உலகெங்கும் உள்ள நமது 7,02,000 ஊழியர்கள் கடின உழைப்பின் மூலம் இந்த பொருளாதார சவாலை எதிர் கொள்ள உதவுவார்கள் என நம்புகிறேன். ” என தெரிவித்துள்ளார்.